சார்பெழுத்துகள்

உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
                    -நன்னூல்

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும்.

இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்து என்றனர்.

சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன

1. உயிர்மெய் எழுத்து

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

க்’ என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர்வதால் ‘க’ என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

2. ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஃ) என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது  என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு. [1]

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லினஉயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எடுத்துக்காட்டு

 • அஃது – ‘அ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
 • இஃது – ‘இ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்

3. உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்குஉயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை

மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ
                          -நன்னூல்

எ.கா:

1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம்.

ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.

இதில்

செய்யுளிசை அளபெடை,  இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன.

செய்யுளிசை அளபெடை

அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல். செய்யுளிசை அளபெடை செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். இதனை இசைநிறை அளபெடை என்றும் வழங்குவர்.

எடுத்துக்காட்டு

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். 
இன்னிசை அளபெடை

இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனிமையாக இசைப்பதற்காக ஒத்த இசையெழுத்து கூட்டி எழுதப்படுவது.

செய்யுளிசை, சொல்லிசை அகிய இரு காரணங்களும் இல்லாமல் வெறுமனே இனிய இசைக்காக இது கூட்டி எழுதப்படும்.

காட்டு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [1]

இந்தத் திருக்குறள்

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை

என அமைந்திருப்பினும் வெண்டளை இலக்கணத்தில் பிழை நேராது. அப்படி இருக்கையில் அளபெடை கூட்டப்பட்டிருப்பது இன்னிசைக்காக என்பதை உணரலாம்.

            சொல்லிசை அளபெடை
             

சொல்லிசை அளபெடை வினையெச்ச வாய்பாட்டை இசையாக்கி ஒலித்துக் காட்டும்.

ஏடுத்துக்காட்டு

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். [1]

அளவு என்பது அளவுதலைக் குறிக்கும் வினைச்சொல். ‘அளவி’ என்பது இதன் வினையெச்சம். ‘அளவி’ என எழுதியிருந்தாலும் செய்யுள் தளை தட்டாது. பொருளும் மாறுபடாது. அப்படி இருக்கும்போது ‘அளைஇ’ என இங்கு இசைச்சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைப்பது சொல்லிசை அளபெடை.

4. ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.

ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

5. குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

(குறுகிய ஓசையுடைய உகரம்)
எ.கா:

நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

பந்து என்னும் சொல்லில் கடைசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேட்டு, பேச்சு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தின் வகைகள்

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை

 1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
 2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
 3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
 4. வன்றொடர்க் குற்றியலுகரம்
 5. மென்றொடர்க் குற்றியலுகரம்
 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இவை அனைத்தும் மொழியின்(சொல்லின்) இறுதியில் வரும் குற்றியலுகரங்கள்.

இவற்றுடன்

 • தொல்காப்பியம் காட்டும் மொழிமுதல் குற்றியலுகரம்
 • அரையுயிர்க் குற்றியலுகரம்

என்பனவும் கருதத் தக்கவை.

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

உதாரணம்:-

பாகு, வீசு, காடு, காது, கோபு, ஆறு

மேற்கண்ட இரண்டெழுத்துச் சொற்களில் நெட்டெழுத்தைத் தொடர்ந்து வந்த வல்லின மெய்யின் மீது ஏறி நிற்கும் உகரம் தனக்குறிய ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரை குறைந்து ஒலிக்கிறது. இதற்கு “நெடிற்றொடர்க் குற்றியலுகரம்” என்று பெயர்.

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

எஃகு, கஃசு, அஃது போன்ற சொற்களில்வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் ஆய்த எழுத்தைத் தொடர்ந்து ஈற்றில் குறைந்து ஒலிப்பதால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வருவது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமாகும்.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

அழகு, அரசு, பண்பாடு, உனது, உருபு, பாலாறு போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு, சு, டு, து, பு, று) உயிரெழுத்தைத் தொடர்ந்து (ழ்+அ=ழ, ர்+அ=ர, ப்+ஆ=பா, ன்+அ=ன, ர்+உ=ரு. ல்+ஆ=லா) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு உயிரெழுத்தைத் தொடர்ந்து வருவது உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாகும்.

வன்றொடர்க் குற்றியலுகரம்

நாக்கு, கச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு, சு, டு, து, பு, று) வல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து (க், ச், ட், த், ப், ற்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு வல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவது வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.

மென்றொடர்க் குற்றியலுகரம்

தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு,சு,டு,து,பு,று) மெல்லின மெய்யெழுத்துக்களைத்தொடர்ந்து (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு மெல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவதே மென்றொடர்க் குற்றியலுகரமாகும்.

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

செய்து, சார்பு, சால்பு, மூழ்கு போன்ற சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு, சு, டு, து, பு, று) இடையின மெய்யெழுத்துக்களைத்தொடர்ந்து (ய், ர், ல், வ், ழ், ள்) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு இடையின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.

 

மொழிமுதல் குற்றியலுகரம்

பொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். இவை அனைத்தும் சொற்கள் புணரும்போது மெய்யெழுத்தைப் போல் மொழியின் இறுதியில் நின்று உயிர் ஏறி முடியும்.

 • பாகு + னிது என்னும்போது பாகு என்பது பாக் என நின்று வருமொழியின் உகரம் ஏறிப் பாகினிது என முடியும்.

மொழிமுதல் எழுத்துக்கள் என்று தொல்காப்பியம் குறிப்பிடும் 94 எழுத்துக்களில் நுந்தை என்னும் குற்றியலுகரச் சொல்லும் ஒன்று. இச் சொல்லில் ‘நு’ என்னும் ஒழுத்து நுங்கு, நுவல், நுழை, நுணங்கு என்னும் சொற்களில் வரும் நு போல இதழ் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், இதழ் குவியாமல் அரை மாத்திரை அளவு ஒலிக்கும்.

நுந்தை என்பது உன் தந்தை எனப் பொருள்படுவதோர் முறைப்பெயர்

அரையுயிர்க் குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது வல்லின உகர எழுத்துக்களில் முடியும் ஆறு வகையான சொற்கள். இவை அனைத்தும் மொழியிறுதிக் குற்றியலுகரங்கள். தொல்காப்பியர் மொழிமுதல் குற்றியலுகரம் என ‘நுந்தை’ என்னும் முறைப்பெயரைக் குறிக்கிடுகிறார். இவற்றுடன் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரையில் தமிழில் புழக்கத்தில் உள்ள குற்றியலுகரம் இந்த அரையுயிர்க் குற்றியலுகரம்.

மெய்யெழுத்துக்களில் வ, ய ஆகிய இரண்டையும் இக்கால மொழியியலாளர்கள் அரையுயிர் எனக் குறிப்பிடுகின்றனர். இலக்கண நூல்கள் இவற்றை உடம்படுமெய் எனக் காட்டுகின்றன. உயிர் முன் உயிர் வந்து புணரும்பொது உடம்படுமெய் தோன்றும்.

வெண்பா யாப்பானது நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடு கொண்டு முடியும். திருக்குறளில் 10 படல்கள் அறிவு என்னும் சொல்லைக்கொண்டு முடிகின்றன. [1] இப்படிப் பார்க்கும்போது அறிவு என்னும் சொல் பிறப்பு என்னும் வாய்பாடுதானே? பிறப்பு என்பது குற்றியலுகரம் அல்லவா?

கதவைத் திற என்கிறோம். இதில் கதவு + ஐ = கதவை எனக் குற்றியலுகரம் போலப் புணர்ந்துள்ளதைக் காண்கிறோம்.அறிவற்றம் காக்கும் கருவி திருக்குறள் 421 என்னும்போது அறிவு என்னும் சொல் குற்றியலுகரம் புணர்வது போலப் [2]புணர்ந்துள்ளது அல்லவா?

இந்தகைய நிலை ‘வு’ எழுத்துக்கு எதனால் நேர்ந்தது? அரையுயிர் என்பதனால் நேர்ந்தது.

6. குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.[1][2][3]

எடுத்துக்காட்டு

 • நாடு + யாது -> நாடியாது
 • கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

 • கேள் + மியா -> கேண்மியா

7. ஐகாரக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.

ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.

ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
                 -- நன்னூல்

எ.கா:


ஐந்து – ஐகாரம் மொழிக்கு முதலில் – 1 1/2 மாத்திரை
வளையல் – ஐகாரம் மொழிக்கு இடையில் – 1 மாத்திரை
மலை – ஐகாரம் மொழிக்கு கடையில் – 1 மாத்திரை

 

8. ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.


 

 
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
                  - நன்னூல்

எ.கா:


ஔவை

மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள ‘ஔ’ தனக்குறிய இரெண்டு மாத்திரையிலிடுந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.


குறிப்பு:


ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.

9. மகரக்குறுக்கம்

“ம்” என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்
                     - நன்னூல்

எ.கா:

வரும் வண்டி
தரும் வளவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல“நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்”. இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும் (தொல். 51)

பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.

10. ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
                   - நன்னூல்

எ.கா.: முள் + தீது = முஃடீது

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்

 


 

 

    
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: