ஆசிரியப்பா

ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.

இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்டகுறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.

ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.

ஆசிரியப்பாவுக்குரியவை

சீர்

ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது.

தளை

ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரிய நேரொன்றாசிரியத் தளை (மாமுன்நேர்), நிரையொன்றாசிரியத் தளை (விளமுன் நிரை) மிகுந்து வரும். பிற தளைகளும் கலந்து வரும்.

அடி

ஆசிரியப்பாவுக்குரிய அடி அளவடி. நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடியாகவும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையடிகள் இரண்டும் பலவும் குறளடி, சிந்தடிகளாகவும் வரும். ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி. பெருமை, புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது.

ஓசை

ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆகும்.

ஈறு

எல்லா வகை ஆசிரியப்பாவுக்கும் சிறப்பான ஈறு ‘ஏ’ ஆகும். ஏகாரத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ என்னும் ஈறுகளும் உண்டு. நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பான ஈறு ‘என்’ என்பதாகும்.

வகைகள்

ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.

  1. நேரிசை ஆசிரியப்பா
  2. நிலைமண்டில ஆசிரியப்பா
  3. அடிமறிமண்டில ஆசிரியப்பா
  4. இணைக்குறள் ஆசிரியப்பா

பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • நேரிசை ஆசிரியப்பா

கடைசிக்கு முந்திய அடி (ஈற்றயலடி) மூன்று சீர்களைக் கொண்டிருத்தல்.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஆசிரியப்பாவில் ஈற்றயலடி (கடைசிக்கு முந்தைய அடி) மூன்று சீர்களையும் ஏனைய அடிகள் அளவடிகளாய் நான்கு சீர்களுடனும் வருவது நேரிசை ஆசிரியப்பா எனப்படும். ஆசிரியப்பாக்களுள் மிகப் பெரும்பான்மை வழக்கில் இருப்பது இது. இயல்பானது எனும் பொருளில் இது நேரிசை ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.

எடுத்துக்காட்டு

தானே முத்தி தருகுவன் சிவனவன்
அடியன் வாத வூரனைக்
கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே

ஈற்றயலடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் ஏகாரத்தில் முடிந்தது இது. ஆகவே இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.

  • நிலைமண்டில ஆசிரியப்பா

எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல்.

எடுத்துக்காட்டு

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்

என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்

  • அடிமறிமண்டில ஆசிரியப்பா –

எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருக்கும். எனவே எந்த அடியை முதல் நடு ஈற்றடியாக அமைப்பினும் பொருள் மாறாது.

மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே

  • இணைக்குறள் ஆசிரியப்பா

இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே

-யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: