அகப்பொருள் இலக்கணம்

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மையைக் கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் உரையாடுவது போன்ற பாடல்களும் கலித்தொகையில் உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் பிற்காலத்தில் திணை,துறை வகுத்துக் காட்டியுள்ளனர்.

தமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில், அதன் ஆசிரியர் தொல்காப்பியர், அகத்திணை இயலை ஏழு திணைகளாக பகுத்துள்ளார். அவை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பனவாகும். அவற்றுள் ஒருதலைக்காதல் எனும் கைக்கிளை, பொருந்தா காமம் எனும் பெருந்திணை தவிர்த்த பிற ஐந்து திணைகளும், காளை ஒருவனுக்கும் கன்னி ஒருத்திக்கும் இடையே முகிழ்த்து வளரும் காதல் அன்பை பற்றி பாடும் திணைகள் ஆகும். இந்த அன்பின் எழுச்சியால் தலைவன், தலைவியரின் உள்ளத்தே தோன்றுகின்ற இன்பமும் துன்பமும், களிப்பும் கலக்கமும் இணைந்த வாழ்வியலை, இந்த ஐந்து திணைகளில் பிரித்து இலக்கியங்கள் பாடுகின்றன். இப்பாடல்கள், பெரும்பாலும் அவர் உள்ளத்திலே நிகழும் நினைவுப் போராட்டங்களாக தம் நெஞ்சுக்கு சொல்லுவாராக அமைந்தாலும், நெருங்கிய, தோழி, செவிலி, பாணன், பாங்காயினோர் போன்றோரிடம் தம் உள்ளம் திறந்து உரைப்பாராகவும் இவை விளங்குகின்றன.

அகப்பொருள் திணைகள்

 1. குறிஞ்சித்திணை
 2. முல்லைத்திணை
 3. மருதத்திணை
 4. நெய்தல்திணை
 5. பாலைத்திணை

இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,

 1. முதற்பொருள்
 2. கருப்பொருள்
 3. உரிப்பொருள்

ஆகியன ஆகும்.

முதற்பொருள்

தமிழ் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும்.கருப்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். முதற்பொருள் இருவகைப்படும். இவை காலம், நிலம் என இருவகைப்படும். “நிலம்” என்பதனுள் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும், “காலம்” என்பதனுள் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் என்னும் பலவகையானவையும் அடங்கும்

நிலம்

தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. இவற்றுள்,

 1. மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி எனப்படும்.
 2. காடும் காடுசார்ந்த நிலமும் முல்லை எனப்படும்.
 3. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனப்படும்
 4. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும்.
 5. மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் பாலை எனப்படும்.

காலம்

காலம் அல்லது பொழுதை பெரும் பொழுது, சிறு பொழுது என இரண்டு பெரும் பிரிவுகளாகத் தமிழ் இலக்கணம் வகுத்து உள்ளது.

 • பெரும்பொழுது: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் என அறுவகை.
 • சிறு பொழுது: மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் என்பன.

திணையும் காலமும்

நிலத்திணையின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு திணைக்கும் அவற்றுக்கு உரிய காலங்கள் உள்ளன.

 • முல்லைத் திணை: கார்காலமும் மாலைப் பொழுதும்
 • குறிஞ்சித் திணை: கூதிர் காலமும் யாமப் பொழுதும்
 • மருதத் திணை: வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்
 • நெய்தல் திணை: பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்
 • பாலைத் திணை: நண்பகலும் வேனிற் காலமும்

கருப்பொருள்

தமிழ் இலக்கணத்தில் கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும்.முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வைகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும் என்கிறது. இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது. இப் பதினான்கு கருப்பொருள் வகைகளும் பின்வருமாறு:

 1. ஆரணங்கு (தெய்வம்)
 2. உயர்ந்தோர்
 3. அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர்)
 4. புள் (பறவை)
 5. விலங்கு
 6. ஊர்
 7. நீர்
 8. பூ
 9. மரம்
 10. உணா (உணவு)
 11. பறை
 12. யாழ்
 13. பண்
 14. தொழில்

உரிப்பொருள்

தமிழ் இலக்கணத்தில் உரிப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும்.முதற்பொருள், கருப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகள் சார்ந்த கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. அவற்றில் அந்தந்த நிலப்பகுதிக்குரிய ஒழுக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன. இவ்வொழுக்கங்கள்:

 • புணர்தல்: ஒன்றுசேர்தல்
 • இருத்தல்: பிரிவைப் பொறுத்து இருத்தல்
 • ஊடல்: தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல்
 • இரங்கல்: பிரிவு தாங்காது தலைவி வருந்துதல்
 • பிரிதல்: தலைவன் தலைவியைப் பிரிதல்

என்பனவாகும். ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை வருமாறு:

 • குறிஞ்சி: புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.
 • பாலை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.
 • முல்லை: இருத்தலும், இர்த்தல் நிமித்தமும்.
 • மருதம்: ஊடலும், ஊடல் நிமித்தமும்.
 • நெய்தல்: இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

ஒரு அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சார்ந்தது எனத் தீர்மானிப்பது உரிப்பொருளே. உரிப்பொருள் மயங்குவதில்லை. முதற்பொருளில் நிலம் மயங்காது. பிற மயங்கும். இது திணை மயக்கம் எனப்படும்.

அகப்பொருள் திணைகள்

 

குறிஞ்சித்திணை

 

குறிஞ்சியாவது, ‘மலையும் மலைசார்ந்த இடங்களும்’, இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும் குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.

 

குறிஞ்சியின் கருப்பொருட்கள்:

 

கடவுள் முருகக்கடவுள்
மக்கள் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வேம்பன், கானவர்
புள் கிளி, மயில்
விலங்கு புலி, கரடி, யானை
ஊர் சிறுகுடி
நீர் அருவி நீர், சுனை நீர்
பூ வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம் ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
உணவு மலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறை தொண்டகப்பறை
யாழ் குறிஞ்சி யாழ்
பண் குறிஞ்சிப்பண்
தொழில் வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல், தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்

 

குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: “பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது”

 

பாலைத்திணை

 

பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லயும் குறிஞ்சியும் முறை முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என்பது ஆகும். இதனால், காதலர் இடையே ‘பிரிவும், பிரிதல் நிமித்தமும்’ ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள், பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.

 

பாலையின் கருப்பொருட்கள்:

 

கடவுள் கொற்றவை (துர்க்கை)
மக்கள் விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள் புறா, பருந்து, எருவை, கழுகு
விலங்கு செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி
ஊர் குறும்பு
நீர் நீரில்லாகுழி, நீரில்லாகிணறு
பூ குரா, மரா, பாதிரி
மரம் உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்
பறை துடி
யாழ் பாலை யாழ்
பண் பாலைப்பண்
தொழில் வழிப்பறி

 

பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: “பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்கு சொல்லியது” இதை தற்கால திரைப்படங்களிலும் நாம் காணலாம், தலைவன் தலைவி பிரிவின் போது பாடல் காட்சிகளை கண்டால் இது நன்கு விளங்கும் முள் மரங்கள், உடைந்த கட்டிடங்கள், பாலைவனம்………..

 

முல்லைத்திணை

 

முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, ‘இருத்தல், இருத்தல் நிமித்தம்’ முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர். முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்.

 

முல்லையின் கருப்பொருட்கள்:

 

கடவுள் மாயோன் (திருமால்)
மக்கள் குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
புள் காட்டுக்கோழி
விலங்கு மான், முயல்
ஊர் பாடி, சேரி, பள்ளி
நீர் குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
மரம் கொன்றை, காயா, குருந்தம்
உணவு வரகு, சாமை, முதிரை
பறை ஏறுகோட்பறை
யாழ் முல்லை யாழ்
பண் முல்லைப்பண்
தொழில் சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.

 

முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: “வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது”

 

மருதத்திணை

 

மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.

 

மருதத்தின் கருப்பொருட்கள்:

 

கடவுள் வேந்தன் (இந்திரன்)
மக்கள் மள்ளர், ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள் வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்கு எருமை, நீர்நாய்
ஊர் பேரூர், மூதூர்
நீர் ஆற்று நீர், கிணற்று நீர்
பூ தாமரை, கழுனீர்
மரம் காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை நெல்லரிகிணை, மணமுழவு
யாழ் மருத யாழ்
பண் மருதப்பண்
தொழில் விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்

 

மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: “பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்கு கிழத்தி சொல்லியது”

 

நெய்தல்திணை

 

கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்’ ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.

 

நெய்தலின் கருப்பொருட்கள்:

 

கடவுள் வருணன்
மக்கள் சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
புள் கடற்காகம், அன்னம், அன்றில்
விலங்கு சுறா, உமண் பகடு
ஊர் பாக்கம், பட்டினம்
நீர் உவர்நீர் கேணி, மணற்கேணி
பூ நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
மரம் கண்டல், புன்னை, ஞாழல்
உணவு மீனும் உப்பும் விற்று பெற்றவை
பறை மீன்கோட்பறை, நாவாய் பம்பை
யாழ் விளரி யாழ்
பண் செவ்வ்வழிப்பண்
தொழில் மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்

 

நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: “பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது”

 

இக்கருப்பொருட்கள் அவ்வத் திணைக்குரிய சிறந்த பொருட்கள் என்றே கருத வேண்டும். இவையன்றி பிறவும் உள்ளன என்பதும் அவையும் இலக்கியங்களில் பயின்று வருதலும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: