பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

வகை

இந்நூற்பாக்கள் புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியது ஆகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன.

காலம்

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

பதிற்றுப்பத்து பதிகங்கள்

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் தொகுதிகளின் பட்டியல்

பகுதி பாடியவர் பாடப்பட்ட சேர மன்னன்
முதல் பத்து
இரண்டாம் பத்து குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மூன்றாம் பத்து பாலைக் கௌதமனார் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
நான்காம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
ஐந்தாம் பத்து பரணர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
ஆறாம் பத்து காக்கைபாடினியார் (நச்செள்ளையார்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஏழாம் பத்து கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதன்
எட்டாம் பத்து அரிசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை
பத்தாம் பத்து

அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)

வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்

 • இமையவரம்பன் (58)
 • இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25)
 • இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25)
 • இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55)
 • இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38)

கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்

 • செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25)
 • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17)
 • குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16)

பதிற்றுப்பத்து – பதிகம் தரும் செய்திகள்

பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.

இரண்டாம் பத்து

 • இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன்
  • இமையத்தில் வில் பொறித்தான்
  • ஆரியரை வணக்கினான்
  • யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
  • பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான்

மூன்றாம் பத்து

 • பல்யானைச் செல்கெழு குட்டுவன்
  • உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
  • அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
  • முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான்
  • அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்
  • நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்

நான்காம் பத்து

 • களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரல்
  • பூழி நாட்டை வென்றான்
  • நன்னனை வென்றான்

ஐந்தாம் பத்து

 • கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
  • ஆரியரை வணக்கினான்
  • கண்ணகி கோட்டம் அமைத்தான்
  • கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
  • வியலூரை அழித்து வெற்றி கண்டான்
  • கொடுகூரை எறிந்தான்
  • மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
  • கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
  • சோழர் ஒன்பதின்மரை வென்றான்
  • படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்

ஆறாம் பத்து

 • ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
  • தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
  • பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
  • வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
  • மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
  • கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.

ஏழாம் பத்து

கல்வெட்டு – புகழூர் தாமிழி (பிராமி)

 • செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • பல போர்களில் வென்றான்
  • வேள்வி செய்தான்
  • மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான்
  • அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான்
  • பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்

எட்டாம் பத்து

 • பெருஞ்சேரல் இரும்பொறை
  • கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
  • தகடூர்க் கோட்டையை அழித்தான்

ஒன்பதாம் பத்து

 • இளஞ்சேரல் இரும்பொறை
  • கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் ‘ஐந்தெயில்’ கோட்டையைத் துகளாக்கினான்.
  • பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
  • வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான்
  • வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.
  • மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
  • தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான்
  • சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
  • அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்

நடை

பதிற்றுப்பத்து பாடல்களில் சில சொற்களின் பயன்பாடுகள்:

கசடு = சேறு, வஞ்சகம் ‘கசடு இல் நெஞ்சம்’ -பதிற். 44-6
காணியர் காணலியரோ = பார்கட்டும் அல்லது பார்க்காமல் போகட்டும் ‘ஆடுநடை அண்ணல் நிற் பாடுமகள் காணியர் காணலியரோ நிற் புகழ்ந்த யாக்கை’ – பதிற்.44-7
துளங்கு = ஆடு, அலைமோது. ‘துலங்குநீர் வியலகம்’ பதிற். 44-21
நுடங்கல் = ஆடல், ‘கொடி நுடங்கல்’ -பதிற். 44-2
மேவரு = விரும்பும் \ மேவு + வரு \ மேவு = விரும்பு \ வரு – துணைவினை \ ‘வேவரு சுற்றம்’ – பதிற். 48-16

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: