கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன,

பாடல் தொகைகள்

கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், குறிஞ்சிக்கலியில் 23 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், மருதக்கலியில் 35 படல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், பாலைக்கலியில் 35 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

குறிஞ்சிக்கலி

புணர்தலும் புணர்தலும் நிமித்தமும் குறிஞ்சி ஆகும். குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அமைந்து படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளன.
“சுடர்த்தொடீஇ கேளாய்”
என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் 51 ஆம் பாடல் ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்து இன்பம் பயப்பதாகும். இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின் முன்னோடியாகக் கூறப்படுகிறது.

முல்லைக்கலி

முல்லைக்கலிப் பாடல்கள், நோக்கம் ஒன்றுபட்டு இல்லிருக்கும் தலைவி ஆற்றியிருத்தலைக் கூறுகிறது. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

மருதக்கலி

பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும், அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும், தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.

நெய்தற்கலி

பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும்

பாலைக்கலி

பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும், தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கியக் கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும்.

கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்

‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’, ‘கல்வி வலவர் கண்ட கலி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருதுகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்
செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

                   (கலி ,133)

கலித்தொகை காட்டும் சமூகம்

களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றி செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.

வரலாற்று, புராணச் செய்திகள்

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத ‘காமன் வழிபாடு’ பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: