இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால்ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம்மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

எடுத்துக்காட்டு

சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து ‘இனிது’ என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது ‘இனியவை நாற்பது’ எனப்பட்டது. இதனை ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ என்றும் உரைப்பர்.

இனியவை நாற்பது – மூலம்

கடவுள் வாழ்த்து

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

(அருஞ்சொற்பொருள்: கண்மூன்றுடையான்- சிவபெருமான்; துழாய்மாலையான்- திருமால்/பெருமாள்; முகநான்குடையான்- பிரமன்; ஏத்தல்-போற்றித்துதித்தல்.)

நூல்

பாட்டு: 01.

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
நற்சவையில் கைக்கொடுததல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

(அருஞ்சொற் பொருள்: நற்சவை- நற்சபை/நல்அவை; கைக்கொடுத்தல்- உதவுதல்; சாலவும்- மிகவும்; தெற்றவும்- தெளிவாக; மேலாயார்- பெரியோர்கள்/மேலானவர்; சேர்வு- சேர்ந்திருத்தல்/துணைக்கொள்ளுதல்)

பாட்டு: 02.

உடையான் வழக்கினி(து), ஒப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன்னினிது, மாணாதாம் ஆயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தானினிது நன்கு.

(அருஞ்சொற்பொருள்:உடையான் – பொருளுடையவன்; வழக்கு- வழங்குதல்/ ஈதல்; மாணாதாம்- மாட்சிமைப்படவில்லை; நெடியார்- தாமதிக்காதவராய்; துறததல்- விட்டுநீங்கல்/துறவியாகப்போதல்; தலையாக- முதன்மையாக.)

பாட்டு:03.

ஏவது மாறா இளங்கிளைமை முன்னினிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகவினிதே
ஏருடையான் வேளாண்மை தானினி(து) ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

(அருஞ்சொற்பொருள்: ஏவது- ஏவியது; இளங்கிளைமை- இளைய புதல்வர்கள்; நவை- குற்றம்; ஏர்- ஏர்களை/ ஏர்மாடுகளை; தேரின் – ஆராய்ந்துபார்த்தால்; திசைக்கு- தான்செல்கின்ற திசையில்.)

பாட்டு: 04.

யானையுடைய படைகாண்டல் முன்னினிதே
ஊனைத்தின்(று) ஊனைப் பெருக்காமை முன்னினிதே
கான்யாற்(று) அடைகரை ஊரினி(து) ஆங்கினிதே
மானம் உடையார் மதிப்பு.

(அருஞ்சொற்பொருள்: படை-சேனை; காண்டல்- படையை உண்டாக்கல்; ஊன்- மாமிசம்; ஊன்- உடம்பு; மதிப்பு- கொள்கை.)

பாட்டு: 05.

கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்னினிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொலலாங்(கு) உரையாமை நன்கு.

(அருஞ்சொற்பொருள்: கொல்லாமை- ஓருயிரையும் கொல்லாமை; கோல்கோடி- நடுநிலைமை தவறி; மாராயம்-சிறப்பு; யார்மாட்டும்- யாவரிடத்தும்; பொல்லாங்கு- குற்றம்/ இல்லாததும் பொல்லாததும்.)

பாட்டு: 06.

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்னினிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.

(அருஞ்சொற்பொருள்: ஆற்றுந்துணை- முடிந்தஅளவு; அறம்- தருமம்; பாற்பட்டார்-நன்னெறியில் வாழுபவர்கள்; பயம்- பயனுடைய; வலவை- வெட்கம்; காப்படைய-காவலாக; கோடல்- கொள்ளுதல்.)

பாட்டு: 07.

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிகவினிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்னினிதே
தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல்
கொண்(டு)உடையான் ஆகல் இனிது.

(அருஞ்சொற்பொருள்: அந்தணர்- வேதியர்; ஓத்து- வேதம்; பந்தம்- சொந்தபந்தம்; படை- தானை/சேனை; அடையான்- ஏற்காதவன்.)

பாடல்: 08.

ஊரும் கலிமா உரனுடைமை முன்னினிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்னினிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது.

(அருஞ்சொற்பொருள்: ஊரும்- ஏறிச்செல்லும்; கலிமா- குதிரை; உரன்- வலிமை; தார்- மாலை; சமம்- போர்; வரை- மலை; கதம்- கோபம்; ஆர்வம்- அன்பு; பேதுறார்- மயக்கமடையாதவராய்.)

பாடல்: 09.

தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்னினிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையர் ஆகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.

அருஞ்சொற்பொருள்: அமர்புடையார்- விருப்பமுடையார்/சேர்ந்துவாழ்பவர்; விசும்பு- வானம்; காண்பு- காணுதல்; பங்கம்- குற்றம்; பரிந்து- இரக்கம்கொண்டு.)

பாடல்: 10.

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்(பு) இலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தான்இனிது நன்கு.

அருஞ்சொற்பொருள்: கடம்- கடன்; நிறை- கற்பு; அகறல்- அகன்றுபோதல்/நீங்கிப்போதல்.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: